குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure
அதிகாரம் - 39 - இறைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
பரிமேலழகர் விளக்கம்
சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - குடைநிழற் கண்ணே தங்கும் உலகம். ('செவி கைப்ப' என்றதற்கு ஏற்ப, இடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்ப' என்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின், மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.