குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns
அதிகாரம் - 39 - இறைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான்.
பரிமேலழகர் விளக்கம்
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும். (முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. 'பிறர்' என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற் பிரித்து உயர்த்து வைத்தல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.