குறள் 33:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive
அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.