குறள் 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws
அதிகாரம் - 4 - அறன்வலியுறுத்தல்
மு.வரதராசன் விளக்கம்
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
பரிமேலழகர் விளக்கம்
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை