குறள் 277:
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as night
அதிகாரம் - 28 - கூடாவொழுக்கம்
மு.வரதராசன் விளக்கம்
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.
பரிமேலழகர் விளக்கம்
குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம் ('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.