குறள் 276:

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live,- no men are found than these of 'harder eye'
அதிகாரம் - 28 - கூடாவொழுக்கம்
மு.வரதராசன் விளக்கம்
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
பரிமேலழகர் விளக்கம்
நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.