குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
To 'penitents' sincere avails their 'penitence'; Where that is not, 'tis but a vain pretence
அதிகாரம் - 27 - தவம்
மு.வரதராசன் விளக்கம்
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.
பரிமேலழகர் விளக்கம்
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். (பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின், 'அவம் ஆம்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.