குறள் 261:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence'
அதிகாரம் - 27 - தவம்
மு.வரதராசன் விளக்கம்
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும்தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்" என்று கூறப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.