குறள் 169:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

To men of envious heart, when comes increase of joy, Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ
அதிகாரம் - 17 - அழுக்காறாமை
மு.வரதராசன் விளக்கம்
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும்,பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.
பரிமேலழகர் விளக்கம்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க