குறள் 168:
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
Envy, embodied ill, incomparable bane, Good fortune slays, and soul consigns to fiery pain
அதிகாரம் - 17 - அழுக்காறாமை
மு.வரதராசன் விளக்கம்
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்