குறள் 1327:

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

In lovers' quarrels, 'tis the one that first gives way, That in re-union's joy is seen to win the day
அதிகாரம் - 133 - ஊடலுவகை
மு.வரதராசன் விளக்கம்
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும்போது உணரப்படும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.