குறள் 1326:
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
'Tis sweeter to digest your food than 'tis to eat; In love, than union's self is anger feigned more sweet
அதிகாரம் - 133 - ஊடலுவகை
மு.வரதராசன் விளக்கம்
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம்.அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.