குறள் 1197:
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
While Kaman rushes straight at me alone, Is all my pain and wasting grief unknown
அதிகாரம் - 120 - தனிப்படர்மிகுதி
மு.வரதராசன் விளக்கம்
( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?