குறள் 1196:
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is good
அதிகாரம் - 120 - தனிப்படர்மிகுதி
மு.வரதராசன் விளக்கம்
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை;துயரமும் உருவாகும்.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.