குறள் 1164:
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty bark that wafts to yonder shore
அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்
மு.வரதராசன் விளக்கம்
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.
பரிமேலழகர் விளக்கம்
(தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை. (இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும ஆயிற்றிலை' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.