குறள் 1159:

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove
அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை
மு.வரதராசன் விளக்கம்
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரை யொருவர் காணாமல் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!
பரிமேலழகர் விளக்கம்
(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?