குறள் 1158:
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewell
அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை
மு.வரதராசன் விளக்கம்
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.