குறள் 1154:
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word
அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை
மு.வரதராசன் விளக்கம்
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?