குறள் 1153:

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heart
அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை
மு.வரதராசன் விளக்கம்
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல நேரிடுவதால்; "பிரிந்திடேன்" என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. (அரோ: அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.