குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
'There's no one knows my heart,' so says my love, And thus, in public ways, perturbed will rove
அதிகாரம் - 114 - நாணுத்துறவுரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.