குறள் 1138:
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
In virtue hard to move, yet very tender, too, are we; Love deems not so, would rend the veil, and court publicity
அதிகாரம் - 114 - நாணுத்துறவுரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பாவம் இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்;பரிதாபத்திற்குரியவர் என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.
பரிமேலழகர் விளக்கம்
(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.) நிறை அரியர் - இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது; மன் அளியர் என்னாது - மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது; காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ).
சாலமன் பாப்பையா விளக்கம்
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.