குறள் 1130:
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
Rejoicing in my very soul he ever lies; 'Her love estranged is gone far off!' the village cries
அதிகாரம் - 113 - காதற்சிறப்புரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காதலர், எப்போதும் உள்ளத்தோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.
பரிமேலழகர் விளக்கம்
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.