குறள் 1129:

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

I fear his form to hide, nor close my eyes: 'Her love estranged is gone!' the village cries
அதிகாரம் - 113 - காதற்சிறப்புரைத்தல்
மு.வரதராசன் விளக்கம்
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லாதவர் என்று அவரைக் கூறும்.
பரிமேலழகர் விளக்கம்
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.