குறள் 1002:
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
Who giving nought, opines from wealth all blessing springs, Degraded birth that doting miser's folly brings
அதிகாரம் - 101 - நன்றியில்செல்வம்
மு.வரதராசன் விளக்கம்
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.
பரிமேலழகர் விளக்கம்
பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். (இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.