குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
Who fills his house with ample store, enjoying none, Is dead Nought with the useless heap is done
அதிகாரம் - 101 - நன்றியில்செல்வம்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு.அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?
பரிமேலழகர் விளக்கம்
வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் - உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான். ('வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல்.வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி. அதன்கண் அவனாற் செய்யக்கிடந்ததோர் உரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும், இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.