குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
The world abides; for 'worthy' men its weight sustain Were it not so, 'twould fall to dust again
அதிகாரம் - 100 - பண்புடைமை
மு.வரதராசன் விளக்கம்
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும்.இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம்.('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர்.மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.