குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence.'
அதிகாரம் - 100 - பண்புடைமை
மு.வரதராசன் விளக்கம்
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.
பரிமேலழகர் விளக்கம்
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், அதனைப் 'பாராட்டும்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.