குறள் 988:
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good
அதிகாரம் - 99 - சான்றாண்மை
மு.வரதராசன் விளக்கம்
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
பரிமேலழகர் விளக்கம்
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.