குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim
அதிகாரம் - 98 - பெருமை
மு.வரதராசன் விளக்கம்
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.