குறள் 98:
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart
அதிகாரம் - 10 - இனியவைகூறல்
மு.வரதராசன் விளக்கம்
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.