குறள் 978:

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with praise
அதிகாரம் - 98 - பெருமை
மு.வரதராசன் விளக்கம்
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர். (பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.