குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
The man endowed with greatness true, Rare deeds in perfect wise will do
அதிகாரம் - 98 - பெருமை
மு.வரதராசன் விளக்கம்
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.