குறள் 966:

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

It yields no praise, nor to the land of Gods throws wide the gate: Why follow men who scorn, and at their bidding wait
அதிகாரம் - 97 - மானம்
மு.வரதராசன் விளக்கம்
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?
பரிமேலழகர் விளக்கம்
இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது?(புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?