குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains
அதிகாரம் - 95 - மருந்து
மு.வரதராசன் விளக்கம்
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
பரிமேலழகர் விளக்கம்
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.