குறள் 944:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree
அதிகாரம் - 95 - மருந்து
மு.வரதராசன் விளக்கம்
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. (அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.