குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found
அதிகாரம் - 10 - இனியவைகூறல்
மு.வரதராசன் விளக்கம்
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை
பரிமேலழகர் விளக்கம்
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.