குறள் 937:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

Ancestral wealth and noble fame to ruin haste, If men in gambler's halls their precious moments waste
அதிகாரம் - 94 - சூது
மு.வரதராசன் விளக்கம்
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.
பரிமேலழகர் விளக்கம்
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.