குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way That they may good obtain, and see a prosperous day
அதிகாரம் - 94 - சூது
மு.வரதராசன் விளக்கம்
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?
பரிமேலழகர் விளக்கம்
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?