குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad
அதிகாரம் - 93 - கள்ளுண்ணாமை
மு.வரதராசன் விளக்கம்
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது;காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
பரிமேலழகர் விளக்கம்
களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.