குறள் 922:

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

Drink not inebriating draught Let him count well the cost Who drinks, by drinking, all good men's esteem is lost
அதிகாரம் - 93 - கள்ளுண்ணாமை
மு.வரதராசன் விளக்கம்
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
பரிமேலழகர் விளக்கம்
கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)'
சாலமன் பாப்பையா விளக்கம்
போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.