குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
As demoness who lures to ruin woman's treacherous love To men devoid of wisdom's searching power will prove
அதிகாரம் - 92 - வரைவின்மகளிர்
மு.வரதராசன் விளக்கம்
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வஞ்சக எண்ணங்கொண்ட "பொதுமகள்" ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட "மோகினி மயக்கம்" என்று கூறுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
மாய மகளிர் முயக்கு - உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர்.(அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்.தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.