குறள் 904:
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought
அதிகாரம் - 91 - பெண்வழிச்சேறல்
மு.வரதராசன் விளக்கம்
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
பரிமேலழகர் விளக்கம்
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.