குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost
அதிகாரம் - 90 - பெரியாரைப் பிழையாமை
மு.வரதராசன் விளக்கம்
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
சிறந்து அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். (சார்பு - அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உய்யார் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.