குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed
அதிகாரம் - 90 - பெரியாரைப் பிழையாமை
மு.வரதராசன் விளக்கம்
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள்,நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர். (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.