குறள் 895:

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead
அதிகாரம் - 90 - பெரியாரைப் பிழையாமை
மு.வரதராசன் விளக்கம்
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வௌவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.