குறள் 89:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

To turn from guests is penury, though worldly goods abound; 'Tis senseless folly, only with the senseless found
அதிகாரம் - 9 - விருந்தோம்பல்
மு.வரதராசன் விளக்கம்
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.