குறள் 880:
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy
அதிகாரம் - 88 - பகைத்திறந்தெரிதல்
மு.வரதராசன் விளக்கம்
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.