குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it well
அதிகாரம் - 87 - பகைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
பரிமேலழகர் விளக்கம்
காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.