குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.
If men from enmity can keep their spirits free, Who over them shall gain the victory
அதிகாரம் - 86 - இகல்
மு.வரதராசன் விளக்கம்
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.
பரிமேலழகர் விளக்கம்
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்? (இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?