குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding misery
அதிகாரம் - 85 - புல்லறிவாண்மை
மு.வரதராசன் விளக்கம்
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
அருமறை சோரும் அறிவிலான் - பெறுதற்கு அரிய உபதேசப்பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன்; தானே தனக்குப் பெருமிறை செய்யும் - அவ்வுறுதி அறியாமையால் தானே தனக்கு மிக்க வருத்தத்தைச் செய்து கொள்ளும். ('சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. மிக்க வருத்தம் - பொறுத்தற்கு அரிய துன்பங்கள். இனி அருமறை சோரும் என்பதற்குப் பிறரெல்லாம் 'உள்ளத்து அடக்கப்படும் எண்ணத்தை வாய் சோர்ந்து பிறர்க்கு உரைக்கும்' என்று உரைத்தார். அது பேணாமை என்னும் பேதைமையாவதன்றிப் புல்லறிவாண்மையன்மை அறிக.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.